Tuesday, December 13, 2011

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

கவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்: ''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். 'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.
''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன். ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.
''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாதுஎன்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

Monday, December 5, 2011

இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள்



இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள் :


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.

28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும்.
வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு,
மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம்.
சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக்
கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா,
விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என
வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி
புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3.
விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம்,
மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்